தமிழகத்தில் கொரோனா தொற்று இரண்டாவது தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருந்தபோதும் வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் உணவு விடுதி, காய்கறி கடை, பால் கடை உள்ளிட்ட கடைகள் திறக்கப்பட்டு பகல் 12 மணிக்கு அடைக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் 50 சதவீத பயணிகளோடு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் வைரசின் தாக்கம் அதிகரிப்பதால் சீர்காழி நகர் பகுதியில் தினம்தோறும் ஏராளமானோருக்கு வைரஸ் தொற்று இருப்பது தெரிய வருகிறது. இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களை சுகாதாரத்துறையினர் சீர்காழி அரசு மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் சீர்காழி நகராட்சி சார்பில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பிளீச்சிங் பவுடர், கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனவே பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டைவிட்டு வெளியே செல்வதை குறைத்துக் கொள்ள வேண்டும். மேலும் வெளியே செல்லும் போது கண்டிப்பாக முக கவசம் அணிந்து செல்ல வேண்டும் என நகராட்சி ஆணையர் தமிழ்ச்செல்வி நகர பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நிருபர்: முரளிதரன், சீர்காழி.