0 0
Read Time:2 Minute, 37 Second

கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 32 ஆயிரத்து 662 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 348 பேர் பலியான நிலையில், 30 ஆயிரத்து 107 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 1713 பேர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களிலும், 494 பேர் பிற மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடலூர் அரசு மருத்துவமனையில் மொத்தம் 350 படுக்கைகள் உள்ளன. இதில் அனைத்து படுக்கைகளிலும் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதவிர கடலூரில் உள்ள தனிமைப்படுத்தும் மையங்களில் 295 கொரோனா நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும், அரசு மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் முழுமையாக நிரம்பி விட்டதாலும், கூடுதல் தனிமைப்படுத்தும் மையங்களை அமைக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை மையமாக செயல்பட்ட கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரியில் உள்ள அனைத்து அறைகளும் நேற்று முன்தினம் சுத்தம் செய்யப்பட்டு தனிமைபடுத்தும் மையமாக மாற்றப்பட்டது. தொடர்ந்து குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டது. இதையடுத்து அங்கு சமூக இடைவெளியுடன் கட்டில்கள் போடப்பட்டுள்ளன. இந்த தனிமைப்படுத்தும் மையத்தில் மொத்தம் 400 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

நிருபர்: அருள்மணி, கடலூர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %