0 0
Read Time:2 Minute, 48 Second

செம்பனார்கோயில், மார்ச்.28
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே காளகஸ்திநாதபுரம் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ காலபைரவர் கோயில் உள்ளது. இங்குள்ள காலபைரவர், பிரம்மனின் அகந்தையை அழித்தவராகவும், ஜலந்தாசுரனை சம்ஹரித்தவராகவும், காலத்தை நிர்ணயிப்பவராகவும், கால பயத்தை நீக்குபவராகவும், ஏனைய தீய சக்தியிலிருந்து பக்தர்களை காப்பவராகவும் விளங்குகிறார்.

பல்வேறு சிறப்புகளை கொண்ட இக்கோயில் மிகவும் சிதலமடைந்து காணப்பட்டதால் கிராம மக்களின் முயற்சியால் கும்பாபிஷேகம் நடத்த திருப்பணி நடைபெற்று வந்தது. இந்த திருப்பணி முடிவடைந்ததை முன்னிட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 24-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை, நவகிரக ஹோமங்களுடன் யாகசாலையில் முதல் கால யாகசால பூஜை தொடங்கியது.

புனிதநீர் அடங்கிய கடங்களுக்கு பூஜைகள் செய்து நான்காம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. பின்னர் பூர்ணாகுதி செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனையடுத்து புனிதநீர் அடங்கிய கடங்களை மேளதாளங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோயிலை சுற்றி வலம் வந்து விமான கும்பத்தை அடைந்தனர். அங்கு வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் ஓத வான வேடிக்கையுடன் கோபுர கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அப்போது அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து காலபைரவர், விநாயகர், வீரன் ஆகிய சாமிகளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

கும்பாபிஷேகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்தனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %