மதுரை: கொரோனாவால் பலியான மதுரை கர்ப்பிணி மருத்துவர் சண்முகப் பிரியா ஓராண்டு காலம் கொரோனா தடுப்புப் பணியில் முன்களப் பணியாளராகப் பணியாற்றினார். மருத்துவர் சண்முகப் பிரியா கொரோனாவுக்கு பலியானது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அனுப்பானடி சுகாதார மையத்தில் மருத்துவராக பணியாற்றியவர் சண்முகப் பிரியா. 8 மாத கர்ப்பிணியாக இருந்த போது கொரோனா தடுப்பு பணிக்காக ஓராண்டுக்கும் மேலாக இடைவிடாமல் பணியாற்றியவர் சண்முகப் பிரியா.
கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் சண்முகப் பிரியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. முதலில் தனியார் மருத்துவமனையிலும் பின்னர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் டாக்டர் சண்முகப் பிரியா. ஆனாலும் சிகிச்சை பலனின்றி சண்முகப் பிரியா நேற்று காலமானார். அவரது நுரையீரலில் பெரும்பகுதி கொரோனா வைரஸ் தாக்குதலுக்குள்ளாகி இருந்ததுதான் மரணத்துக்கு காரணமாகிவிட்டது என்றனர் மருத்துவர்கள். அத்துடன் கர்ப்பிணியாக இருந்ததால் கொரோனா தடுப்பூசியையும் சண்முகப் பிரியா போட்டுக் கொள்ளவில்லை. ஓராண்டு காலம் கொரோனா தடுப்பு பணியில் முன்களப் பணியாளராக பணியாற்றி உயிரை பறிகொடுத்திருக்கும் மருத்துவர் சண்முகப் பிரியாவின் மரணம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர் சண்முகப் பிரியாவின் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் ஆழந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.