திமுக சொத்துப்பட்டியல் வீடியோ தொடர்பாக ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த 14ம் தேதி தனது கையில் கட்டியிருக்கும் ரஃபேல் வாட்ச்சின் பில்லை வெளியிட்டார். அதோடு திமுகவின் முக்கிய தலைவர்களின் சொத்துப்பட்டியலையும் வெளியிட்டார். இது அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து DMK Files என்ற தலைப்பில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும், கட்சியின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மீதும், தி.மு.க. நிர்வாகிகள் மீதும் அவதூறான, உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் எம்.பி. நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
அதில், அண்ணாமலை தனது பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், ரூ.500 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அதேபோல் பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து உதயநிதி சார்பில் 50 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கு தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு நோட்டீஸ் விடுத்துள்ளார். அவதூறு பரப்பும் வகையில் வீடியோ வெளியிட்டதற்காக அண்ணாமலை பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். 48 மணி நேரத்துக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்காவிட்டால் அவர்மீது வழக்கு தொடரப்படும். மேலும், இழப்பீடு தொகையாக ரூ.100 கோடி வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.