கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தற்காப்பு பயிற்சி அளித்து, அவர்களின் தற்காப்புக்காக கைத்துப்பாக்கி வழங்க வேண்டும் என்று கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டில் கடந்த மாதம் 25 ஆம் தேதி, கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து சேலம் மாவட்டம் மானாத்தாள் கிராம நிர்வாக அலுவலர் வினோத் குமாரை, சிலர் கொலை செய்யும் நோக்கில் விரட்டிய சம்பவம் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவங்கள் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், ”முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் படுகொலை செய்யப்பட்டது போன்ற மற்றொரு நிகழ்வாக, சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகாவில் உள்ள மானாத்தாள் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்த வினோத்குமாரை, அதே பகுதியைச் சேர்ந்த சிலர் வெட்டி கொலை செய்யும் நோக்கத்தில் விரட்டிய சம்பவம் நடைபெற்று உள்ளது.
இதைப் போன்று நடைபெறும் சம்பவங்களால் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் அனைத்து வருவாய்த்துறை ஊழியர்களும், அச்சத்தோடும் பாதுகாப்பற்ற நிலை இருந்த போதிலும், நேர்மையாக பணி செய்து வருகின்றனர்.
அவ்வாறு பணி செய்யும் நேர்மையான அதிகாரிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பிற்காக ஒரு தற்காப்பு பயிற்சியை உடனடியாக அரசு வழங்கவும், தேவைப்படும்பட்சத்தில் கைத்துப்பாக்கி வழங்கவும் அரசு உடனடியாக பரிசீலனை செய்ய வேண்டும் எனவும், புகார் மனு அளித்தவுடன் காவல்துறை நடவடிக்கை எடுத்திடவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும், வருவாய்த்துறை அமைச்சரையும் கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.