0 0
Read Time:4 Minute, 5 Second

கேரளாவில் நடைபெற்ற படகு விபத்தில் பலி எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கேரளத்தில் அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்வதாக தலைமைச் செயலர் தெரிவித்துள்ளார்.

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலுள்ள தனூர் – ஒட்டுபிரம் கடற்கரையில் உல்லாச படகு சவாரி நடைபெறுவது வழக்கம். கோடை விடுமுறையை முன்னிட்டு இந்தியா முழுக்க பல சுற்றுலாத் தளங்களில் பொது மக்கள் குவிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று மாலை படகு சவாரியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. படகில் மொத்தம் 50 பேர் பயணம் செய்ததாக சொல்லப்படுகிறது. அவர்களில் 30க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கியுள்ளனர்.

நீரில் மூழ்கியவரை தேடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 22பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 8 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்களில் பலர் ஆபத்தான நிலையில் கொட்டக்கலில் உள்ள MIMS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் நான்கு பேர் வென்டிலேட்டர் ஆதரவில் உள்ளனர்.

படகில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானோர் பரப்பனங்காடி மற்றும் தனுர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது முதற்கட்டமாக தகவல் வெளியாகி உள்ளது. மலப்புரம் மாவட்டத்தில் உள்ள தனுர் பகுதியில் ஒருவரது இல்ல விழாவில் கலந்து கொள்ள வந்தவர்கள் கும்பலாக படகு சவாரி செய்த போது படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

பலியானவர்களில் ஒன்பது பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் அஸ்னா (18), சஃப்னா (7), பாத்திமா மின்ஹா ​​(12), சித்திக் (35), ஜலாசியா ஜாபிர் (40), அஃப்லா (7), பைசல் (3), அன்ஷித் மற்றும் ரஷீனா ஆகியோர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்தில் கேரள அமைச்சர் அகமது ரியாஸ் மற்றும் அப்துல் ரகுமான் ஆகியோர் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர். 21 பேர் அடங்கிய தேசிய மீட்பு குழுவினர் ஈடுபட்டு மூழ்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

தனூர் படகு விபத்தில் உரிமையாளர் மீது பிணை வழங்கப்படாத பிரிவின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மலப்புரம் தானூரைச் சேர்ந்த நாசர் மீது கொலை உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் நாசர் தலைமறைவாகியுள்ளார்.

கேரளா படகு விபத்து சம்பவத்தின் எதிரொலியாக இன்று கேரளா அரசின் அனைத்து நிகழ்வுகளும் ரத்து என கேரள தலைமைச் செயலாளர் அறிவித்துள்ளார். இன்று காலை விபத்து நடைபெற்ற இடத்திற்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் நேரில் சென்று ஆய்வு செய்கிறார். இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 2லட்சம் ரூபாய் நிதி உதவி பிரதமர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %