கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் வெறும் 13 பந்துகளில் 50 ரன்கள் விளாசிய ராஜஸ்தான் அணி வீரர் ஜெய்ஸ்வால், ஐபிஎல் வரலாற்றில் அதிவேக 50 ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில், ஒவ்வொரு அணியும் போட்டிகளில் வெற்றி பெற தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், கொல்கத்தா ஈடன் கார்டர்ன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதி வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி, 20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 42 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். அபாரமாக பந்துவீசிய ராஜஸ்தான் வீரர் சஹல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி ராஜஸ்தான் அணி விளையாடி வருகிறது. அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராஜஸ்தான் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் யாஷஸ்வி ஜெய்ஸ்வால், முதல் ஓவரிலேயே 2 சிக்ஸர், 3 பவுண்டரி அடித்து எதிரணியை கதிகலங்கச் செய்தார். தொடர்ந்து பந்துகளை பறக்கவிட்ட அவர், வெறும் 13 பந்துகளில் 50 ரன்கள் விளாசினார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிவேக அரைசதம் (50 ரன்கள்) அடித்த வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.