0 0
Read Time:5 Minute, 20 Second

சீர்காழி சட்டைநாதர் கோவில் குடமுழுக்கு 32 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது. இந்த குடமுழுக்கு விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டைநாதர் கோவில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற இத்தலத்தில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். மேலும் இங்கு சிவபெருமான் மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

திருஞானசம்பந்தர், இத்தலத்தில் உமையம்மை அளித்த ஞானப்பாலினை அருந்தி தனது மூன்றாவது வயதில் தேவாரத்தின் முதல் பதிகமான ‘தோருடைய செவியன்’ என்ற பதிகத்தை பாடினார் என்பது வரலாறு.

இக்கோவிலில் திருஞான சம்பந்தர், அஷ்ட பைரவர்களுக்கு தனி சன்னதி உள்ளது. இத்தகைய சிறப்புமிக்க கோவிலின் குடமுழுக்கு விழா 32 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று காலை 8.30 மணிக்கு தொடங்கி 10 மணிக்குள் நடந்தது.

குடமுழுக்கை முன்னிட்டு கடந்த 16-ந் தேதி முதல் பூர்வாங்க பூஜைகள் நடந்தன. அன்று புனித நீர் எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. கோவிலின் மேற்கு கோபுர வாசல் அருகே 88 யாக குண்டங்கள் அமைக்கப்பட்ட யாக சாலையில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் கும்ப அலங்காரம், கலாகர்ஷணம், யாத்ரா ஹோமம், யாத்ரா தானம் மற்றும் யாகசாலை பிரவேசம் நடந்தது. கடந்த 20-ந் தேதி(சனிக்கிழமை) முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. 21-ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) இரண்டாம் கால மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகளும், அதனைத் தொடர்ந்து 22-ம் தேதி (திங்கட்கிழமை) பரிவார மூர்த்திகளுக்கு மகா குடமுழுக்கும் நடந்தது. செவ்வாய்க்கிழமை 6-ம் கால மற்றும் 7-ம் கால யாக பூஜையும், தீபாராதனையும் நடந்தது.

அதனை தொடர்ந்து நேற்று காலை 9 மணி அளவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் யாகசாலை குண்டத்தில் இருந்து கடம் புறப்பட்டு மேள, தாளங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் ஊர்வலமாக கோவில் உட்பகுதியில் வலம் வந்தது. பின்னர் சட்டை நாதர், பிரம்மபுரீஸ்வரர், திருநிலைநாயகி உள்ளிட்ட கோவில்களில் குடமுழுக்கு நடந்தது. அப்போது கீழ கோபுரம் மேற்பகுதியில் இருந்து ஹெலிகாப்டர் வலம் வந்து தெற்கு மேலகோபுரம், வடக்கு கோபுரம் வழியாக சுற்றி வந்து பின்னர் மலைக்கோவில் மீது மலர் தூவியது. அதனைத்தொடர்ந்து ராஜகோபுரம், தெற்கு கோபுரம், மேற்கு கோபுரம், வடக்கு கோபுரங்கள் மீது மலர்களை தூவியது. அதனை பக்தர்கள் பரவசத்துடன் கண்டு களித்தனர். தொடர்ந்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

குடமுழுக்கு விழாவில் ஆட்சியர் மகாபாரதி, போலீஸ் சூப்பிரண்டு நிஷா, எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், தமிழ் சங்க தலைவர் மார்கோனி, நகர்மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன், ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், நகர வர்த்தக சங்க தலைவர் எஸ்.கே.ஆர்.சிவசுப்பிரமணியன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சாமிநாதன், முன்னாள் நகர் மன்ற தலைவர் கனிவண்ணன், நகர்மன்ற துணைத் தலைவர் சுப்பராயன், தி.மு.க. மாவட்ட பொருளாளர் அலெக்ஸாண்டர், பழனியப்பன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சேர்ந்த அதிகாரிகள் உள்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.குடமுழுக்கு விழாவையொட்டி நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %