0 0
Read Time:4 Minute, 33 Second

சென்னையில் 82 ரேஷன் கடைகளில் நாளை முதல் தக்காளி விற்பனை செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார்.

சமையலுக்கான அடிப்படை காய்கறிகளில் இன்றியமையாத ஒன்றாக இருப்பது வெங்காயம் மற்றும் தக்காளி ஆகும். இந்த காய்கறிகள் இல்லாமல் சமையல் செய்வதே மிக மிக கடினம். தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை ஏறினால் பொதுமக்கள் மற்றும் ஓட்டல் தொழிலில் ஈடுபடுவோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவர்.

அந்த வகையில், தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே தக்காளி விலை ஒரு கிலோ 40 ரூபாயிலிருந்து படிப்படியாக உயர்ந்து தற்போது 130 ரூபாயை தொட்டுள்ளது. தக்காளி விலை கிலோ ரூ.130 வரை உயர்ந்து விட்டதால் அதை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் பெரியகருப்பன் இன்று கூட்டுறவுத்துறை அதிகாரிகள், கூட்டுறவு சங்க பதிவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் விற்பனை அதிகரிப்பு குறித்து முடிவு எடுக்கப்பட்டது. ரேஷன் கடைகளில் தக்காளியை விற்பது குறித்த கருத்துகள் பெறப்பட்டுள்ள நிலையில், அது சாத்தியமா? நடைமுறைச் சிக்கல்கள் என்ன? என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-

தக்காளியை குறைந்த விலைக்கு விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பண்ணை பசுமை கடைகளில் தக்காளி கொள்முதலை அதிகரித்துள்ளோம். 10 நாட்களுக்கு தக்காளி விலை குறைய வாய்ப்பில்லை என்பதால், சென்னையில் நாளை முதல் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட உள்ளது. வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை என 3 ஆக பிரித்து மொத்தம் 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும். பின்னர் அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.. விவசாயிகளிடம் இருந்து நேரடியாக தக்காளி கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளோம். சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்கள் தக்காளி தேவையை பூர்த்தி செய்கின்றன.

விலையேற்றத்தை உயராமல் தடுப்பதற்கும், விலையை குறைப்பதற்கும் விவசாயிகள், வணிகர்களிடம் பேசியுள்ளோம்.10 நாட்கள் நீடிக்கும் என கூறியிருக்கிறார்கள். அனைத்து மாநிலங்களிலும் விலையேற்றம் உள்ளது. பருவமழை பாதிப்பு, நியாயமான விலை கிடைக்காததால் சாகுபடி பரப்பு குறைந்துள்ளது என மத்திய அமைச்சர் கூறியிருக்கிறார். தக்காளி பதுக்கல் இல்லை. வருவதே குறைவாகத்தான் வருகிறது. தமிழகம் முழுவதும் மொத்தம் 111 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும். ஒரு கிலோ தக்காளி ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்று தக்காளி விலை உயர்கிறது. அடுத்தாண்டு தக்காளி விலையேற்றம் வராதவாறு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %