ஏடிஎம் இயங்காததால் மயிலாடுதுறை மக்கள் அவதி! நன்கு பராமரிக்க சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வங்கிகளுக்கு வேண்டுகோள்!
அவர்விடுத்த அறிக்கையில்,
“இந்தியாவில் பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் பணமற்ற பரிவர்த்தனை மற்றும் ஏடிஎம்களை பயன்படுத்தி தேவைக்கு ஏற்ப பணத்தை எடுத்துக் கொள்ளும் முறையை உருவாக்கி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் வங்கிக் கணக்கு வைத்துள்ள அத்துனை பேரும் ஏடிஎம்களை வைத்துள்ளார்கள். ஏடிஎம்கள் வாயிலாக தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார்கள். இப்படி அதிகமான நபர்கள் பயன்படுத்தும் ஏடிஎம்கள் மயிலாடுதுறை பகுதி மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் முறையாக பராமரிக்கப்படாமல் அவ்வப்போது இயங்காது இருப்பது மிகவும் வேதனை அளிக்கின்றது.
கையில் பணம் இல்லாமல் பல்வேறு செயல்பாடுகளுக்கு மருத்துவ தேவைகளாக இருக்கலாம், மற்ற சொந்த விஷயங்களுக்கு ஏடிஎம் ஐ நம்பியே பலர் இருக்கிறார்கள் என்பதை வங்கி அலுவலர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். ஏடிஎம் எடுத்துக்கொண்டு செல்கின்ற பொழுது அது இயங்கவில்லை என்று ஒற்றை வரியில் எழுதி வைத்துவிட்டு மூடிவிடுவதால் அதை நம்பியே வருகின்றவர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் அடுத்தது பணத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் திண்டாடுகின்ற நிலையை காண முடிகின்றது. இனி வருங்காலங்களிலாவது இப்படிப்பட்ட அவல நிலை எங்கும் ஏற்படாமல் மக்கள் அவதிப்படாமல் இருக்கும் வகையில் அனைத்து வங்கி ஏடிஎம்களும் முறையாக பராமரிக்கப்பட்டு பழுதுகள் இல்லாமல் இயங்குவதற்கும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்”
என்று சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வங்கிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.