அவர் குறிப்பிட்டுள்ள அறிக்கையில்,
அனைத்து ரயில்களிலும் இரண்டு அல்லது மூன்று பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. பெட்டிகளில் பயணம் செய்ய மிகக் குறைந்த கட்டணம் உள்ளதால் ஏழை எளிய மக்கள் அப்பெட்டியை பயன்படுத்த பெரிதும் முயற்சி மேற்கொள்கின்றனர். அவ்வாறு அப்பட்டிகளில் பயணிக்க விரும்புபவர்கள் சென்னையிலிருந்து நீண்ட தூரமாக செல்ல வேண்டுமென்பதால் அந்த ரயில் புறப்படும் நேரத்திற்கு சுமார் 2-3 மணி நேரம் முன்பாகவே வந்து ரயிலில்இடம்பிடித்து இருக்கையை உறுதி செய்து கொள்கிறார்கள்.
சாதாரணமாக ஒரு பெட்டியில் 100 பேர் அமர வேண்டுமென்றால், 200 பேருக்கு மேல் செல்வதை காண முடிகின்றது. ரிசர்வேஷன் டிக்கெட்டுகளுக்கு தேவையான அளவு மட்டுமே கொடுக்கப்படுவதைப் போல முன்பதிவு இல்லா பெட்டிகளுக்கு இருக்கும் இருக்கை அளவைவிட சற்றே கூடுதலாக டிக்கெட் கொடுக்கலாம். அதனைத் தாண்டி மிக அதிகமாக கொடுப்பது என்பது பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. பல பயணிகள் நடக்கும் பகுதிகள் முழுவதும் அமர்ந்தோ நின்றோ பயணம் மேற்கொள்கிறார்கள்.கழிவறையில் கூட பயணிக்கிற அவலநிலையும் உள்ளது. பல பயணிகள் ஏறுவதற்கு கூட இடமில்லாமல் பயணத்தை தவறவிடுகிறார்கள்.
டிக்கெட் எண்ணிக்கையை குறைத்து டிக்கெட் இல்லை என்று சொல்லிவிட்டால் அடுத்த ரயிலிலோ அல்லது பேருந்துகளிலோ மாற்றி பயணம் மேற்கொள்வார்கள். எண்ணிலடங்கா டிக்கெட் கொடுப்பது மிகவும் தவறாகும். மேலும் அவ்வாறு பயணிக்கின்ற பயணிகளுக்குள் இட நெருக்கடி ஏற்படுவதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. அப்படிப்பட்ட கஷ்டங்களை நம்மில் பலரும் அனுபவித்திருப்போம். மேலும் பலர் மது அருந்தி விட்டோ இதர இட நெருக்கடி பிரச்சனையாலோ வாய் தகராறு முற்றி ஓடும் ரயிலில் கைகலப்பு ஏற்படுவதை காணப்படுகின்றது.
வாய் கூசும் வார்த்தைகளால் ஒருவருக்கொருவர் வசை பாடுவதும், அதற்கு ஒரு படி மேலே சென்று ஓடும்ரயிலில் இருந்து கீழே தள்ளி விடுகின்ற சம்பவங்களும் ஏற்பட்டு பல்வேறு உயிரிழப்புகள் நடந்துள்ளன. குறிப்பாக மயிலாடுதுறைக்கு அருகாமையில் ரயில் வருகின்ற பொழுது கடந்த வாரம் கீழே விழுந்து இளைஞர்கள் படுகாயம் அடைந்ததையும், விருதுநகர் அருகில் நேற்று மது போதையில் ரயிலிருந்து கீழே விழுந்து இரண்டு இளைஞர்கள் உயிரிழந்ததையும் இதே போல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இப்படிப்பட்ட வழக்குகள் பதிவாகி இருப்பதையும் காண முடிகின்றது. உடனடியாக ரயில்வே நிர்வாகம் பொதுப்பெட்டிக்கு வழங்குகின்ற டிக்கெட் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் பிரச்சனைகள் தவிர்த்து உயிரிழப்புகளை முற்றிலும் ஏற்படாமல் இருக்க வழிவகை பிறக்கும் என்று சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கைவிடுத்துள்ளார்.