0 0
Read Time:9 Minute, 5 Second

அமலாக்கத்துறை மூலம் பாஜக விடுக்கும் மிரட்டல்களுக்கு INDIA கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகள் அஞ்சப்போவதில்லை என்று முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மதுரை மாநகரில் கருணாநிதியில் நூற்றாண்டுப் பெருமையாக ஜூலை 15-ஆம் நாள் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளான, கல்வி வளர்ச்சி நாளில் திறந்து வைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகம் மக்களிடம் மகத்தான ஆதரவினைப் பெற்றிருப்பதுடன், இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் பயனளிக்கும் பணியைத் தொடங்கி விட்டது.

அறிவுத் திருக்கோயில்களால் சமுதாயத்தை மேம்படுத்திட திராவிட மாடல் அரசு முனைப்புடன் செயல்பட்டு வரும் நிலையில், மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசோ அமலாக்கத்துறையைக் கொண்டு பா.ஜ.க. அல்லாத எதிர்க்கட்சியினரைக் குறிவைத்து சோதனைகள் நடத்தி அவதூறுகளைப் பரப்பி, அவப்பெயர் ஏற்படுத்தும் அரசியல் கயமைத்தனத்தில் முழுமூச்சாக இறங்கியிருக்கிறது.

எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பு குறித்த இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் ஜூலை 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, ஜூலை 17-ஆம் நாள் காலையில் நான் பெங்களூருக்குப் புறப்படும் நேரத்தில், திமுக துணைப் பொதுச்செயலாளரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடியையும், அவரது மகன் கௌதமசிகாமணி எம்.பி.யையும் குறி வைத்து, அமலாக்கத்துறையை ஏவி, சோதனை நடத்தியது மத்திய பா.ஜ.க. அரசு.

பழிவாங்கும் போக்குடன் பச்சையாக அரசியல் செய்யும் பா.ஜ.க. அரசின் இத்தகைய நடவடிக்கைகள் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கும் அதன் தோழமைக் கட்சிகளுக்குமான வெற்றியை எளிதாக்கி வருகின்றன என ஊடகத்தினரிடம் தெரிவித்துவிட்டு பெங்களூரு புறப்பட்டேன்.

கடந்த ஜூன் 24-ஆம் நாள் பீகார் தலைநகர் பாட்னாவில் தி.மு.கழகம் உள்ளிட்ட 16 கட்சிகள் பங்கேற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்திற்குச் சில நாட்கள் முன்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி மீது அமலாக்கத்துறை ஏவப்பட்டதை அனைவரும் அறிவீர்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது மட்டுமின்றி, பா.ஜ.க.வின் மதவாத – ஜனநாயக விரோத – எதேச்சாதிகாரத் தன்மையைக் கொள்கைப்பூர்வமாக எதிர்க்கின்ற கட்சியினர் மீது அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சி.பி.ஐ. ஆகிய அமைப்புகளை ஏவிவிடுவதும், எதிர்க்கட்சி வரிசையில் குற்றச்சாட்டுக்குள்ளானவர்கள் பா.ஜ.க.வுக்குத் தாவி வந்தால் அவர்களுக்குப் புனிதநீர் தெளித்து ‘புண்ணியவான்’கள் ஆக்கிவிடுவதும் நாடறிந்த ரகசியம்தான். நாம் தனியாக எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை.

பா.ஜ.க.வின் ‘பண்பு’ குறித்து நன்கறிந்த அரசியல் இயக்கங்களின் ஒருங்கிணைப்பாக நேற்றும் (ஜூலை 18), அதற்கு முந்தைய நாளும் (ஜூலை 17) கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் நடந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மதவாதமற்ற சகோதரத்துவமான இந்திய ஒருமைப்பாட்டை பேணிப் பாதுகாத்திட வேண்டும் என்ற லட்சியம் கொண்ட 26 கட்சிகளின் ஒருங்கிணைப்பாக பெங்களூருவில் நடைபெற்ற இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஒருமித்த சிந்தனையுடன் ஒன்றுபட்டிருக்கும் இயக்கங்கள் அடங்கிய கூட்டணிக்குப் பொருத்தமான ஒரு பெயர் பற்றிய ஆலோசனைகளும் சிந்தனைகளும் வெளிப்பட்டபோது, அனைவரும் ஏற்றுக்கொண்ட பெயர்தான் இந்தியா. I.N.D.I.A (Indian National Developmental Inclusive Alliance). ராகுல் காந்தி இந்தியா என்ற கூட்டணியின் பெயரை முன்மொழியுமாறு மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜியிடமும், வழிமொழியுமாறு என்னிடமும் கேட்டுக் கொண்டார். அதன்படியே கூட்டணிக்கு இந்தியா என்ற பெயர் சூட்டப்பட்டது.

எதிர்க்கட்சிகள் கூடுவது ஃபோட்டோ எடுக்கத்தான் என வெளியில் கேலி பேசிய பா.ஜ.க. தலைமைக்கு உள்ளுக்குள் பயம் ஆட்டிப் படைத்தது. மத்திய பிரதேசத்தில் தனது கட்சி நிர்வாகிகளிடம் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பேசியபோதும், அந்தமானில் பேசியபோதும் எதிர்க்கட்சிகளை, குறிப்பாக தி.மு.க.வைத் தேவையின்றி விமர்சித்துப் பேசினார். பெங்களூரு நகரில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்பு முன்கூட்டியே முடிவு செய்யப்பட்ட நிலையில், அவசர அவசரமாக பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டம் டெல்லியில் கூட்டப்பட்டது.

ஊழல் வழக்குகளை எதிர்கொள்ளும் கட்சியினரை அருகருகே வைத்துக்கொண்டு, எதிர்க்கட்சிகள் மீது ஊழல் குற்றம்சாட்டி, ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருவதாகப் பிரதமர் பேசியது ‘ப்ளாக் காமெடி’ எனப்படும் வேடிக்கையான வேதனை.

இவர்களிடமிருந்து இந்தியாவைக் காத்திடவும், 2024-இல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றுபட்ட இந்தியாவையும் அதன் ஜனநாயகத் தன்மையைக் காத்திடவும் பெங்களூரு நகரில் உண்மையான இந்தியா உருவாகியிருக்கிறது.

இந்தியா என்ற சொல் இப்போது அவர்களுக்குப் பிடிக்காத சொல்லாக ஆகிவிட்டது. இந்தியாவைப் பிடிக்காவிட்டால் ‘பாகிஸ்தானுக்குப் போ’ என மதவாத சிந்தனையுடன் பேசிய பா.ஜ.க.வினர் இப்போது எந்த நாட்டுக்கு விசா வாங்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சியிலிருந்து பா.ஜ.க.வுக்கும் – அதனுடன் கூட்டு சேர்ந்து நாட்டின் ஒருமைப்பாட்டைச் சிதைப்பவர்களுக்கும் ‘விசா‘ வழங்கி வெளியே அனுப்பிட மக்கள் ஆயத்தமாகிவிட்டார்கள். அதனை மறைக்கத்தான் அமலாக்கத்துறை தொடங்கி அத்தனை அமைப்புகளையும் ஏவி அச்சுறுத்தும் வேலைகள் நடக்கின்றன. ‘இந்தியா’வில் உள்ள யாரும் இத்தகைய மிரட்டல்களுக்கு அஞ்சப் போவதில்லை. உண்மையான இந்தியாவின் எதிரிகள் யார் என்பதை அடையாளம் காட்ட வேண்டியதே நமது முதன்மையான பணி.

இந்தியாவின் எதிரிகளான மதவாத – ஜனநாயக விரோத – மாநில உரிமைகளைப் பறிக்கும் சக்திகளை நீங்கள் அனைவரும் அடையாளம் காண்பீர்! மக்களிடம் அடையாளப்படுத்துவீர்! நாற்பதும் நமதே – நாடும் நமதே என்ற இலக்குடன் இப்போதே ஆயத்தமாவீர்!

இவ்வாறு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %