மயிலாடுதுறை, ஜூலை- 25:
மணிப்பூரில் 2 மாதங்களுக்கும் மேலாக கலவரம் வெடித்து வருகிறது. அதில் குக்கி பழங்குடியினத்தை சேர்ந்த 2 பெண்களை நிர்வாணப்படுத்தி வீதியில் ஊர்வலமாக அழைத்து சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு தேசிய அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக முக்கிய குற்றவாளியை அம்மாநில காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இதனை அடுத்து இச்சம்பவத்திற்கு நாடு முழுவதும் பல்வேறு எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் எதிரில் மாவட்ட திமுக மகளிர் அணி மற்றும் தொண்டரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் உமாதேவி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். மேலும் மணிப்பூர் சம்பவத்திற்கு துரித நடவடிக்கையை மேற்கொள்ளாத ஒன்றிய பாஜக அரசிற்கு எதிராக ஏராளமானோர் கையில் பதாகைகளை ஏந்தியபடி கண்டன கோஷம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம்.முருகன், கழக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் குத்தாலம் பி.கல்யாணம், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சத்தியசீலன், ஜகவீரபாண்டியன், பால அருள்செல்வன், ஏ.சி.என்.விஜயபாலன், நகர் மன்ற தலைவர் செல்வராஜ், தஞ்சை மண்டல தகவல் தொழில் நுட்ப அணி பொறுப்பாளர் பி.எம்.ஸ்ரீதர் மற்றும் திமுக ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளைக் கழக நிர்வாகிகள், திமுக பிற அணி பொறுப்பாளர்கள் பலர் பங்கேற்றனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்