தரங்கம்பாடி, ஆகஸ்ட்- 05:
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடல் வளம் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் சுருக்குமடி வலைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனை சில கிராமங்கள் மீறுவதால் மீனவர்களிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் சுருக்குமடி வலைக்கு முழுமையாக தடை விதிக்க வலியுறுத்தி தரங்கம்பாடியில் 9 மாவட்ட மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அக்கரைப்பேட்டை மீனவ பஞ்சாயத்து தலைமையிலும் தரங்கம்பாடி பஞ்சாயத்தார் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மயிலாடுதுறை, புதுச்சேரி, கடலூர், காரைக்கால், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவாரூர் ஆகிய 9 மாவட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். கூட்டத்தின் முடிவில் சுருக்குமடி வலை, இரட்டை மடிவலை, அதிவேக இன்ஜின்கள் பொருத்தப்பட்ட படகுகளுக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும். மாவட்ட கலெக்டர், மீன்வளத்துறை அலுவலர்கள் மூலம் இந்த கோரிக்கையை தமிழக முதல்வருக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
எதிர் வரும் 18-ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் நடைபெற உள்ள மாநாட்டில் கலந்து கொள்ளும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களிடம் ஒன்பது மாவட்ட மீனவ பிரதிநிதிகள் இந்த கோரிக்கை மனுவினை அளிக்க வேண்டும். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் மீன்வளத்துறை அதிகாரிகள் சுருக்குமடி வலைக்கு தடை விதிக்கா விட்டால் 9 மாவட்ட மீனவர்கள் ஒன்றிணைத்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்