அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ஆகஸ்ட் 12 வரை அமலாக்கத்துறை காவலில் வைக்க உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குத் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி அவரது வீட்டில் விசாரணை நடத்திய பிறகு நள்ளிரவில் கைது செய்தனர். அப்போது அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால், ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு இதய பைபாஸ் அறுவை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிஷாபானு மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் இந்த வழக்கு 3-வது நீதிபதியான சி.வி.கார்த்திகேயன் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதனையடுத்து இந்த மனு மீதான விசாரணை மூன்றாவது நீதிபதி சி.வி.காா்த்திகேயன் முன்பு நடைபெற்றது.
மூன்றாவது நீதிபதி சி.வி.காா்த்திகேயன் அளித்த அந்த தீர்ப்பில் “ கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு எந்த தடையும் கோர முடியாது. விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டத்துக்கு உட்பட்டவர் தான். தான் குற்றம் செய்யவில்லை என்பதை விசாரணை நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும். கைது செய்யப்பட்டால் நீதிமன்ற காவல் எடுக்க வேண்டியது அவசியம். அமலாக்கத் துறைக்குக் காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பளித்தார்.
இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூலை 18-ம் தேதி அன்று சென்னை காவேரி மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் புழல் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதற்கு பிறகு அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கை தவறானது என்றும் காவலில் எடுத்து விசாரிக்ககூடாது என்றும் செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீது, நீதிபதி போபண்ணா மற்றும் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு இன்று தீர்ப்பளித்தது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், அமலாக்கத்துறை கைது செய்தது சரி என்றும், விசாரணை செய்யலாம் எனவும் தீர்ப்பளித்தது.
மேலும் கைது செய்யப்பட்ட பின் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியாது என தெரிவித்த நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஏ.எஸ்.போபண்ணா அமர்வு, 5 நாட்கள் அதாவது வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்தனர்.
இந்த வழக்கு விசாரணையின்போது அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலையை கருத்தில் கொள்ள வேண்டும் எனவும், அவரின் இதய செயல்பாடுகளை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள் எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் தற்போது அவரில் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்க பிரிவு மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி தலைமையில் விசாரணைக்கு வந்தது.
அமலாக்கத்துறை மனு மீதான விசாரணையின் போது செந்தில் பாலாஜி காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ஆகஸ்ட் 12 வரை அமலாக்கத்துறை காவலில் வைக்க நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.