சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையஇயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுவதால், தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்றும், நாளையும்(மே 10, 11) சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேபோல, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல, தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் வரும் 12 முதல்15-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று ஓரிருஇடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி முதல் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கக்கூடும். ஓரிரு இடங்களில் வழக்கத்தைவிட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை அதிகரிக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியிருக்கும்.
அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் கோமுகி அணையில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். இவ்வாறு வானிலை ஆய்வு மைய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.