வடலூர் அருகே பஸ்-கார்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பெண் உள்பட 3 பேர் பலியாகினர். 24 பேர் காயமடைந்தனர்.
கடலூர் வெளிச்செம்மண்டலத்தை சேர்ந்தவர் ஞானபிரகாசம்(வயது 52). இவர் தனது மனைவி குணசீலி(50), மகள் கீர்த்திகா(10), அந்தோணிசாமி மனைவி விக்டோரியா (65) ஆகியோருடன் சொந்த வேலை காரணமாக நேற்று வடலூருக்கு காரில் சென்றார். அங்கு வேலை முடிந்ததும் அதே காரில் 4 பேரும் கடலூருக்கு புறப்பட்டனர். காரை ஞானபிரகாசம் ஓட்டி வந்தார்.
வடலூர் அருகே ஆண்டிக்குப்பத்தில் மதியம் 2.15 மணி அளவில் சென்றபோது ஞானபிரகாசத்தின் கட்டுப்பாட்டை இழந்த கார், எதிரே கடலூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு விருத்தாசலம் நோக்கி வந்த தனியார் பஸ் மீது மோதியது.
இதில் தனியார் பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது. அந்த சமயத்தில் புவனகிரி அருகே உள்ள சாத்தப்பாடி கிராமத்தை சேர்ந்த கோதண்டராமன் மகன் தாமரைச்செல்வன்(23), ஏலப்பன் மகன் விஜி(22) ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதி நின்றது. இதில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. பஸ்சின் முன்பகுதியும் சேதமடைந்தது. இந்த விபத்தில் விக்டோரியா, தாமரைச்செல்வன், விஜி ஆகிய 3 பேர் பலியானார்கள்.
மேலும் காரில் வந்த ஞானபிரகாசம், குணசீலி, கீர்த்திகா, தனியார் பஸ்சில் பயணம் செய்த ஊ.மங்கலத்தை சேர்ந்த கார்த்திகேயன் மனைவி ராஜேஸ்வரி(30), வன்னியர்பாளையம் ஜெய்சங்கர்(53), காரைக்கால் தனசேகர் மகள் அர்ச்சனா(20), குமாரலிங்கம் மகள் துர்காதேவி(31), விருத்தாசலம் மணிகண்டன்(42), வளர்மதி(33), குமுதா(45), மனோரஞ்சிதம்(67), சக்திவேல்(31), மாலதி(32) உள்பட 24 பேர் காயமடைந்தனர். இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். இந்த விபத்து குறித்து வடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாமரைச்செல்வன், விஜி ஆகியோர் நெய்வேலியில் நடந்த ஒரு சுப நிகழ்ச்சியில் சமையல் வேலை செய்துவிட்டு, மோட்டார் சைக்கிளில் சாத்தப்பாடிக்கு வந்தபோது விபத்தில் சிக்கி பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சாத்தப்பாடி கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.