ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என காயல்பட்டிணத்தில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணத்தில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியின் திருமண விழாவில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். திருமண விழாவில் பேசிய சீமான் தெரிவித்ததாவது..
“ பிரதமர் மோடி தமிழ்நாட்டில் தேர்தலில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன். அப்போது எனக்கு ஒரு விடிவு காலம் வரும். விடுதலைப் பெற்ற இந்தியாவில் எத்தனை கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் பிரதமராக இருந்துள்ளார்கள்.
ஒன்றுக்கும் பயன்படாத ரப்பர் ஸ்டாம்ப் பதவி மட்டும் தான் கொடுத்துள்ளார்கள். சிறுபான்மை மக்களுக்கு எந்த சலுகையும் கொடுக்கப்படவில்லை. சிறுபான்மை மக்களுக்கு மட்டும் ஜிஎஸ்டி வரி விதிப்பு குறைத்து உள்ளார்களா..?
ஒருவர் மதத்தை மாற்ற முடியும். ஆனால் மொழியையும் இனத்தையும் மாற்ற முடியுமா? அப்படி இருக்க என்ன சிறுபான்மை பெரும்பான்மை என்கிற பிரிவினை. இதனால் தான் சிறுபான்மை என்று சொன்னால் செருப்பால் அடிப்பேன் என்று சொன்னேன்.” என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.