புதுச்சத்திரம் அருகே பள்ளிக்கூட வேன் கவிழ்ந்து 8 மாணவர்கள் காயமடைந்தனர். அவர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுச்சத்திரம் அருகே பெரியப்பட்டில் உள்ள தனியார் பள்ளிக்கூட வேன் ஒன்று ஆலப்பாக்கம் பகுதியில் மாணவர்களை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தது. வேனை கீழ்பூவாணிக்குப்பத்தை சேர்ந்த பார்த்திபன் ஓட்டி வந்தார்.
அந்த வேன் பெத்தனாங்குப்பம் அருகே வந்த போது, ரெயில்வே கேட் மூடப்பட்டது. இதனால் டிரைவர் வேனை நிறுத்தி விட்டு கீழே இறங்கி நின்றார். இதையடுத்து வேனில் இருந்த ஆலப்பாக்கத்தை சேர்ந்த 2-ம் வகுப்பு மாணவி தாரண்யா (வயது 7), லோகேஷ் (7), ரோகித் (4), நிதிஷ் (9), கோதண்டராமன் மகன்கள் லோகேஷ் (8), முகேஷ் (7), கதிரவன் மகன்கள் நிதர்சன் (6), நிரஞ்சன் (8) ஆகிய 8 மாணவர்கள் ஒருவருக்கொருவர் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென வேன் பின்நோக்கி சென்று அருகே இருந்த வயல்வெளி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் வேனில் இருந்த மாணவர்கள் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டனர். உடன் அருகில் நின்ற வாகன ஓட்டிகள், அப்பகுதி மக்கள் ஓடிச்சென்று, விபத்துக்குள்ளான வேனில் இருந்த 8 மாணவர்களையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் 8 பேருக்கும் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதற்கிடையில் விபத்து குறித்து தகவல் அறிந்ததும் புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில், பள்ளி மாணவர்கள் வேனில் இருந்து விளையாடிய போது, ஹேண்ட் பிரேக்கை எடுத்து விட்டதால், வேன் பின்நோக்கி சென்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.