மயிலாடுதுறை மாவட்டத்தில் இயற்கை முறையில் பயிர் சாகுபடி மேற்கொண்டுவரும் விவசாயிகள் கட்டணமின்றி அங்ககச்சான்று பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
அங்ககச்சான்று மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் முன்னோடி விவசாயிகள் இயற்கை முறையில் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சி கொல்லிகள் பயன்படுத்தாமல் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். இவ்வாறு அங்கக விவசாயம் செய்யும் விவசாயிகள் குழுக்களாக இணைந்து இந்த திட்டத்தின் கீழ் தங்கள் நிலங்களும் அங்கக முறையில் சாகுபடி செய்யப்படுகிறது என கட்டணமின்றி சான்று பெறலாம்.
விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் அலுவலகத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் விண்ணப்பங்கள் ஆய்வு செய்தல், தகுதியானவர்களை இணையத்தில் பதிவு செய்தல், மதிப்பீடு செய்தல், நஞ்சு குறித்த விவரம் அறிய விளைபொருட்கள் மாதிரிகளை சேகரித்தல் மற்றும் அங்ககச்சான்றிதழ் வழங்குதல் ஆகிய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் விவசாயிகள் குழுக்களாக சேர்ந்தே விண்ணப்பிக்க முடியும். ஒரு குழுவில் குறைந்த பட்சம் 5 உறுப்பினர் இருக்க வேண்டும். ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் அல்லது பக்கத்து கிராமங்களை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். பெண் விவசாயிகள் பங்களிப்பை உறுதி செய்திட வேண்டும். ஒவ்வொரு தனிப்பட்ட விவசாயியும் தாங்கள் வைத்திருக்கும் நில அளவுக்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால் எந்தவொரு சந்தர்பத்திலும் குழுவின் கீழ் உள்ள மொத்த நிலத்தில் 50 சதவீதத்தை விட அதிகமாக ஒரு உறுப்பினர் வைத்திருக்கக் கூடாது.
இத்திட்டத்தில் பொதுவாக இணை உற்பத்தி மற்றும் பகுதி மாற்றம் அனுமதிக்கப்படாது. குழு பதிவு செய்திட விவசாயியின் புகைப்படம், ஆதார் அட்டை நகல், வங்கி புத்தக நகல், நில உரிமைக்கான சிட்டா நகல், பயிர் சாகுபடி குறித்த அடங்கல் நகல், குழு விவசாயிகள் விவரம், சாகுபடி பரப்பு விவரம், தனிநபர் விண்ணப்பம், ஒப்புதல், உறுதி மொழி, விவசாயியின் சாகுபடி விவரத்தாள், குழு விண்ணப்பம், குழு உறுதிமொழி படிவம், குழுவினை பரிந்துரை செய்யும் அலுவலர் படிவம் ஆகிய ஆவணங்கள் தேவையாகும்.
மேலும், அங்ககசாகுபடி செய்து பதிவு செய்யும் குழுக்களுக்கு வேளாண்மைத்துறையின் மூலம் ஊக்கத்தொகை இந்த ஆண்டு முதல் வழங்கப்பட உள்ளது. எனவே, தகுதியுள்ள அங்கக சாகுபடி செய்யும் விவசாயிகள் அனைவரும் தங்களது வட்டார வேளாண்மை உதவி இயக்குனரை அணுகி மேற்கண்ட ஆவணங்களை அளித்து பதிவு செய்து, அங்ககச்சான்று பெற்று தங்களது விளைபொருட்களை நல்ல விலைக்கு விற்று பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.