சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்றிரவு கனமழை பெய்தது. கிளாம்பாக்கம் பகுதியில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியுற்றனர்.
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவில் திடீரென பலத்த மழை பெய்தது. பாரிமுனை, தேனாம்பேட்டை, அண்ணாசாலை, ஆழ்வார் பேட்டை, நுங்கம்பாக்கம், அம்பத்தூர், ஆவடி, பெருங்களத்தூர், தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித்தீர்த்தது.
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலைய வளாகத்தில் இருந்து வெளியேறிய மழை நீர் வண்டலூர் ஜி.எஸ்.டி.சாலையில் தேங்கியது. ஜி.எஸ்.டி. சாலையில் 4 அடிக்கும் மேல் மழை நீர் தேங்கியதால் அவ்வழியாக பயணித்த வாகனங்கள், மற்றும் இருசக்கர வாகன ஓட்டுநர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.