0 0
Read Time:3 Minute, 3 Second

மழையால் ஒத்திவைக்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று கிரிக்கெட் போட்டி தடைபட்ட ஓவரில் இருந்து தொடங்கி இன்று மீண்டும் நடைபெறவுள்ளது.

ஆசிய கோப்பை 2023 சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை நேற்று எதிர்கொண்டது. இரு அணிகளும் மோதும் இந்த போட்டி கொழும்பில் இருக்கும் பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வெற்றி பெற்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய, இந்திய அணி பேட்டிங் செய்தது.

இந்த போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மான் கில் ஆகியோர் அதிரடியாக விளையாடி இந்திய அணிக்கு அருமையான தொடக்கத்தை கொடுத்தனர். இருவருமே அரைசதம் அடித்து ஆட்டமிழந்தனர். கேப்டன் ரோகித் சர்மா 49 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 4 சிக்சர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் அடங்கும். இதேபோல் சுப்மான் கில் 58 பந்துகளில் 52 ரன்கள் விளாசி அவுட்டானார். இதில் அவர் 10 பவுண்டரிகள் விளாசினார்.

மிடில் ஆர்டரில் விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் களத்தில் இருக்கும் நிலையில் திடீரென மழை குறுக்கிட்டது. 24.1 ஓவர் ஆடியிருக்கும் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்துள்ளது. போட்டி தொடங்குவதற்கு முன்பே அப்பகுதியில் 90% மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனால் போட்டி தடைபடும் என தெரிந்த காரணத்தினால் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலும் இப்போட்டிக்கு ரிசர்வ் டே அறிவித்திருந்தது.

அதன் அடிப்படையில் ரத்தான, இந்தியா, பாக் ஆட்டம் இன்று மீண்டும் 24.1 ஓவரிலிருந்து தொடங்கி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று மாலை 3 மணிக்கு தடைபட்ட போட்டிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று போல் இன்றும் மழை பெய்து போட்டி தடைபட்டால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %