வங்கக் கடலில் வரும் 30ஆம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகலாம் என கணிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருநாள் முன்னதாக உருவாகலாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வடதமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மழை காரணமாக வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட தொடக்க பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது
இந்நிலையில் வடமேற்கு வங்கக் கடலில், வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்குப் பகுதியில் செப்டம்பர் 30-ம் தேதி புதிதாக காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
ஆனால், அது தற்போது ஒருநாள் முன்னதாக அதாவது செப். 29ஆம் தேதி உருவாகலாம் என கணிக்கப்பட்டுள்ளது.அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 நாள்களுக்குள் மேலும் வலுப்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.