காவிரி நீர் திறப்பை எதிர்த்து கர்நாடகாவில் பந்த் நடப்பதால், ஓசூர் அருகே தமிழக வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன.
காவிரியில் அக்டோபர் 15 ஆம் தேதி வரை விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு, ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ளது. இதனை செயல்படுத்துமாறு உச்சநீதிமன்றமும் அறிவுறுத்தியுள்ளது. இந்த உத்தரவை ஏற்க மறுத்துள்ள கர்நாடக அரசு, கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 2,696 கன அடி நீரை திறந்து விட்டுள்ளது. இந்நிலையில், காவிரியில் நீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. குறிப்பாக பெங்களூரு, மாண்டியா உள்ளிட்ட மாவட்டங்களில் காங்கிரஸ் எம்.பி.க்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த செவ்வாய் கிழமை (26.09.2023) பெங்களூருவில் பந்த் நடைபெற்ற நிலையில், இன்று (29.09.2023) மாநிலம் முழுவதும் 40 கன்ன அமைப்புகள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பந்த் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அம்மாநிலத் தலைநகர் பெங்களூருவில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. பெங்களூருவில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. அரசுப் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் பேருந்துகள் இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாநில எல்லையில் தமிழகப் பதிவெண் கொண்ட வாகனங்கள் திருப்பி அனுப்படுகிறது. குறிப்பாக தமிழக மாநில எல்லையான ஜூஜூவாடி பகுதியில் தமிழக பதிவு எண் கொண்ட இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் கர்நாடகாவிற்குள் அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பி வைக்கப்படுகிறது. கர்நாடகா பதிவு எண் கொண்ட வாகனங்கள் மட்டும் அம்மாநிலத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன. இதனிடையே ஓசூரில் இருந்து வரக்கூடிய பயணிகள் இறக்கி விடப்பட்டு சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் அத்திப்பள்ளிக்கு நடந்து செல்கின்றனர்.