1 கோடி பனை விதைகள்முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தமிழ்நாடு பனைமரத்தொழிலாளர்கள் நல வாரியம், கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் கடலூர் அருகே தியாகவல்லி ஊராட்சி நஞ்சலிங்கம்பேட்டை கடற்கரையோரம் 1 கோடி பனை விதைகள் நடும் பணி தொடக்க விழா நடந்தது.
விழாவுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை தாங்கி, 1 கோடி பனை விதைகள் விதைக்கும் பணியை தொடங்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் முன்னிலை வகித்தார். தொடர்ந்து தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் தூய்மையே சேவை முன்னெடுக்கும் வகையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தூய்மை பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.அதைத்தொடர்ந்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறியதாவது:-5 கோடி பனை மரங்கள்நிலத்தடிநீரை சேமிக்கவும், மண் அரிப்பை தடுக்கவும் பனைமரங்கள் பெரிதும் உதவுகின்றன.
தமிழகத்தின் மாநில மரமான பனைமரங்களின் எண்ணிக்கை போதிய விழிப்புணர்வு இல்லாததால் படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போது சுமார் 5 கோடி பனைமரங்கள் மட்டுமே உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.ஆகவே சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், நிலத்தடி நீர் சேமிப்பை செறிவூட்டவும் பனைமரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டி தமிழகத்தில் கடற்கரை ஓரங்களில் 1 கோடி பனைவிதைகளை நடும் பணிக்கு திட்டமிடப்பட்டு தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் கடலூர் மாவட்டத்தில் சுமார் 57.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு 2½ லட்சத்திற்கும் மேற்பட்ட பனை விதைகள் நடவு செய்யும் பணி நடைபெறுகிறது.மீன்பிடி இறங்கு தளம்குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெரியக்குப்பம் மீனவ கிராமத்தில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் கடல் அரிப்பு பாதுகாப்பு வசதிகள் அமைக்கும் பணிகள் ரூ.12 கோடி மதிப்பீட்டிலும் மற்றும் அகரம் கிராமத்தில் மரபணு மாற்றப்பட்ட கிப்ட் திலேப்பிய அரசு மீன்குஞ்சு பொரிப்பகம் அமைத்தல் ரூ.3.60 கோடி மதிப்பீட்டிலும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் சொத்திக்குப்பம் மற்றும் ராசாப்பேட்டை மீனவ கிராமங்களில் மீன்பிடி இறங்குதளம் ரூ.8½ கோடி மதிப்பீட்டிலும் மற்றும் சித்திரைபேட்டை, நஞ்சலிங்கம்பேட்டை மீனவ கிராமங்களில் மீன்பிடி இறங்குதளம் ரூ.7½ கோடி மதிப்பீட்டிலும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறினார்.நலத்திட்ட உதவிகள்தொடர்ந்து வருவாய்த்துறை, சமூக பாதுகாப்பு திட்டம், வேளாண்மை துறை, மகளிர் திட்டம், கூட்டுறவு, மாவட்ட தொழில் மையம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் 85 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 25 லட்சத்து 52 ஆயிரத்து 112 மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 2 பேருக்கு வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் கீழ் இளநிலை உதவியாளர் பணிநியமண ஆணை வழங்கப்பட்டது. விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், கூடுதல் கலெக்டரும், திட்ட இயக்குனருமான மதுபாலன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் அருண், தமிழ்நாடு பனைமரத்தொழிலாளர்கள் நலவாரிய உறுப்பினர் பசுமைவளவன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.