அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, பாஜகவுடன் எந்த காலத்திலும் உறவு கிடையாது என உறுதியளித்ததாக தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் கே.எம்.சரிஃப் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் கே.எம்.சரிஃப் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய தமிழ்நாடு எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமியை தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் கே.எம்.சரிஃப் தலைமையில், அக் கட்சியினர் சந்தித்தனர். தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சேலம் மாவட்டச் செயலாளர் அப்துல் ரஷித், மாநில துணை பொதுசெயலாளர் சண்முகராஜா, திருச்சி மாவட்ட செயலாளர் ராயல் சித்திக், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் யூசுப் ராஜா, சிவகங்கை மாவட்ட செயலாளர் அபூபக்கர் சித்திக், திருப்பூர் மாவட்ட செயலாளர் ஒயிட் பாட்ஷா ஆகியோர் உடனிருந்தனர்.
பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதற்கு வாழ்த்துகளையும், சிறிது நாட்களுக்கு முன்பு மதுரையில் நடைபெற்ற அதிமுகவின் மாநாட்டில், நீண்டகால இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள் விடுதலை கோரி தீர்மானம் நிறைவேற்றியதற்கு நன்றி தெரிவிக்கவும் இந்த சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் எந்த காலத்திலும் கூட்டணி கிடையாது என்றும், சிறுபான்மையின ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக அதிமுக எப்போதும் செயல்படும் என்றும் வாக்குறுதி அளித்தார். அவருக்கு எங்களது வாழ்த்துகள்.”
இவ்வாறு அந்த அறிக்கையில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் கே.எம்.சரிஃப் தெரிவித்துள்ளார்.