ஆசிய விளையாட்டு போட்டிகள் தொடரின் 12 ஆவது நாளான இன்று இதுவரை இந்தியா 80 க்கும் மேற்பட்ட பதக்கங்களை கடந்து 4 ஆவது இடத்தில் தொடர்ந்து வருகிறது. குறிப்பாக இன்றைய தினம் இந்தியா முக்கிய போட்டிகளில் தங்கம் வென்று அசத்தியுள்ளது.
வில்வித்தை மகளிர் குழு பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய அணி சீன தைபேவை வீழ்த்தி தங்கம் வென்று அசத்தியது. இந்தியாவின் ஜோதி, அதிதி மற்றும் பர்னீத் ஆகியோர் சீன தைபேவை 230 – 228 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினர்.
கபடி குரூப் சுற்றி ஆட்டத்தில் ஏ பிரிவில் உள்ள இந்திய அணி சீனாவை 50-27 என்ற புள்ளி கணக்கில் அபாரமாக வீழ்த்தியது. இந்தியாவின் பேட்மிண்டன் வீரர் பிரனாய் குமார் ஒற்றையர் அரையிறுதிப் போட்டியில் மலேசியாவின் ஜீ ஜியா வை 2-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேரினார்.
இந்தியாவின் ஸ்குவாஷ் நட்சத்திரங்களான தீபிகா பள்ளிகல், ஹரிந்தர் பால் சிங் இணை கலப்பு இரட்டையர் இறுதிப் போட்டியில் மலேசியாவை வீழ்த்தி தங்கத்தை முத்தமிட்டது. இந்தியாவின் சவுரவ் கோஷல் மலேசிய வீரர் எய்ன் யோவ் இடம் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
இந்தியாவின் ஆடவர் வில்வித்தை அணி கொரியாவை இறுதிப் போட்டியில் வீழ்த்தி தங்கம் வென்றது. மகளிர் மல்யுத்தம் 53 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்ட ஆன்டிம் பங்கல் மன்கோலிய வீராங்கனையை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார்.
இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதிப் போட்டியில் சீனாவிடம் 4-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. இதனால் அடுத்த ஆண்டு பாரிசில் நடைபெறும் ஒலிம்பிக் தொடரில் பங்கேற்க இந்தியா தகுதிச் சுற்று போட்டிகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்றைய கணக்கின் படி இந்தியா ஆசிய விளையாட்டுப் போட்டிகள் பதக்கப் பட்டியலில் 86 பதக்கங்களுடன் 4 ஆவது இடத்தில் உள்ளது. மொத்தமாக 21 தங்கம், 32 வெள்ளி மற்றும் 31 வெண்கலப் பதக்கங்களை இந்தியா கைப்பற்றியுள்ளது.
ஏற்கனவே இதுவரை இல்லாத அளவில், ஆசிய விளையாட்டு போட்டிகளில் கடந்த முறை கைப்பற்றிய 70 பதக்கங்கள் எண்ணிக்கையை இந்த முறை முறியடித்து வரலாறு படைத்துள்ள இந்தியா, மேலும் பல பதக்கங்களை வெல்லும் எனவும் எதிர்பார்க்க படுகிறது. மேலும் இந்தியா தடகளத்தில் மட்டும் 20 மேற்பட்ட பதக்கங்களை வென்று இருப்பது இதுவே முதல் முறையாகும்.
இன்னும் 3 நாட்கள் மீதம் உள்ள நிலையில் இந்தியாவுக்கு சதுரங்கம், ஆடவர் கிரிக்கெட், பேட்மிண்டன் உள்ளிட்ட போட்டிகளில் தங்கத்திற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.