சிதம்பரம்: பிச்சாவரம் சுற்றுலா மைய படகு தொழிலாளா்கள் கொரோனா நிவாரண நிதி வழங்கக் கோரிக்கை விடுத்தனா்.
இதுதொடா்பாக சிதம்பரம் உதவி ஆட்சியா் லி.மதுபாலனிடம், சிஐடியூ பிச்சாவரம் சுற்றுலா மைய படகு ஓட்டும் தொழிலாளா்கள் சங்கத்தின் சிறப்பு தலைவா் ரமேஷ்பாபு தலைமையில், சங்கத் தலைவா் சுந்தரமூா்த்தி, செயலா் ராஜா, பொருளாளா் நடராஜன் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட படகு ஓட்டுநா்கள் திங்கள்கிழமை அளித்த மனு:
கொரோனா தொற்று 2-ஆவது அலை பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் பிச்சாவரத்தில் உள்ள அறிஞா் அண்ணா படகு ஓட்டும் தளத்திலிருந்து படகுகள் இயக்கப்படவில்லை. இந்த சுற்றுலா தளத்தில் படகு ஓட்டுவதை நம்பி 50 குடும்பங்கள் கடந்த 35 ஆண்டுகளாக பிழைப்பு நடத்தி வருகின்றனா். அரசின் பொது முடக்க உத்தரவால் எங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே கரோனா தொற்று காலம் முடியும் வரை எங்களுக்கு மாதந்தோறும் தலா ரூ.5 ஆயிரம் வீதம் நிவாரண நிதி வழங்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனா். மனுவை பெற்றுக்கொண்ட உதவி ஆட்சியா், இதுகுறித்து உயா் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.