சீனாவின் ஹாங்சூவில் கடந்த 23.09.2023 முதல் 8.10.2023 வரை நடைபெற்ற 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 48 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் 20 வீரர், வீராங்கனைகள் 9 தங்கம், 11 வெள்ளி மற்றும் 8 வெண்கலம் என மொத்தம் 28 பதக்கங்களை வென்றனர்.
இதனையடுத்து சென்னையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையாக 9 கோடியே 40 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (12.10.2023) வழங்கி வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இவ்விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் நா. எழிலன், இ. பரந்தாமன், சென்னை மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ் குமார், சென்னை மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் நே. சிற்றரசு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் துணைத் தலைவர்கள் அசோக் சிகாமணி, இராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.