தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில்,
“தென்தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், அடுத்த 4 நாள்களுக்கும் கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் என்று கூறியுள்ளது.
மீனவர்கள் அக்.14, 15 ஆகிய தேதிகளில் லட்சத்தீவு பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
.