மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் மறைவுக்கு தமிழகம் மட்டுமல்லாது தேசிய தலைவர்கள் வரை இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் 82 வயது நிறைவடைந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு உயிரிழந்தார்.
இந்நிலையில், எதிர்கட்சித்தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பங்காரு அடிகளார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் செய்தியில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரும், ஆதிபராசக்தி தொண்டு மருத்துவக் கல்வி மற்றும் பண்பாட்டு அறக்கட்டளையின் தலைவருமான பங்காரு அடிகளார் , தனது 82-ஆவது வயதில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். பங்காரு அடிகளார் அவர்களை இழந்து அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், லட்சக்கணக்கான வாடும் பக்தர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், பங்காரு அடிகளார் அவர்களுடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் தேசியத்தலைவர் ஜே.பி.நட்டா பங்காரு அடிகளாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தனது X தள பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஆன்மீகத்தில் பெண்களுக்கான வழிபாட்டு உரிமையை நிலை நிறுத்தியவர். அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் ஆன்மீகத் தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இவர்களை தொடர்ந்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் பங்காரு அடிகளாரின் மறைவுக்கு இரங்கள் தெரிவித்து அவரது பக்தர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளனர்.