பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி கைது – நவ.3 வரை காவலில் வைக்க தாம்பரம் நீதிமன்றம் உத்தரவு
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டின் அருகே இருந்த கொடி கம்பத்தை அகற்ற வந்த ஜேசிபியின் கண்ணாடியை உடைத்த வழக்கில் பாஜக நிர்வாகிகள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
சென்னை பனையூரில் அமைந்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் வீட்டின் அருகே இருந்த 45 அடி உயர கம்பத்தில், கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு பாஜக ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் புகார் அளித்திருந்தனர். அதன் பேரில் மாநகராட்சியினர் கொடிக்கம்பத்தை அகற்றுவதற்கு ஜேசிபி உடன் வந்தனர்.
அப்போது பாஜக மாநில துணை தலைவர் கரு. நாகராஜன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அரசுக்கு எதிராக கோஷமிட்டு ரகளையில் ஈடுபட்டனர். மேலும் மாநகராட்சி அதிகாரிகள் கொடிக்கம்பத்தை அகற்ற கொண்டு வந்த ஜேசிபி இயந்திரத்தையும் கற்களை கொண்டு தாக்கி கண்ணாடிகளை உடைத்தனர்.
இதனால் அங்கு ரகளையில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்து மண்டபத்தில் தங்க வைத்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், ஜேசிபியின் கண்ணாடி உடைத்த வழக்கில், கன்னியப்பன், பாலமுருகன், செந்தில் குமார், சுரேந்திர குமார், வினோத்குமார், மற்றும் பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அமர் பிரசாத் ரெட்டி தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் நவம்பர் 3-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க தாம்பரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.