கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு பொது மருத்துவமனையில் தினசரி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆண்கள் உள்நோயாளிகள் பிரிவில் செயல்படும் கரோனா சிறப்பு பிரிவில் 48 பேர் சிகிச்சை பெறுகின்றனர். இந்நிலையில், கரோனா வார்டுகளில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து தமிழக அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ. கணேசன் நேற்று (10.05.2021) ஆய்வு செய்தார். அப்போது அவசர சிகிச்சை பெறும் நோயாளிகள் அறை ஆகியவற்றை அவர் பார்வையிட்டார்.
அவரிடம், ‘கொரோனா வார்டில் பணிபுரிய கூடுதலாக மருத்துவ பணியிடங்கள் நிரப்ப வேண்டும், நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும், விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவித்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும், வடலூர், தொழுதூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மருத்துவமனை பணிக்கு வருவோர் நலன் கருதி சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டும்’ என அரசு தலைமை மருத்துவர் எழில் கோரிக்கை விடுத்தார். அக்கோரிக்கைகள் குறித்து முதலமைச்சரிடம் தெரிவித்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் கணேசன் உறுதியளித்தார்.