தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி உள்ளது. இதையொட்டி பல்வேறு மாவட்டங்களில் கடந்த 1 வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையே, இலங்கை மற்றும் அதனையொட்டிய குமரிக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும் இன்று மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் லேசான இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட 7 மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் லேசான மழை சென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பெய்ய வாய்ப்புள்ளது என்று தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.