மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாரில் மீன் பிடி துறைமுகம் இயங்கி வருகிறது. இந்த துறைமுகத்திலிருந்து விசைப்படகுகள், பைபர் படகுகள் மூலம் ஆயிரக்கணக்கான மீனவர்கள் தினந்தோறும் கடலுக்கு சென்று மீன் பிடித்து தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பூம்புகார் துறைமுகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது விசைப்படகுகள் நிறுத்துமிடம், மீன் ஏலக்கூடம், அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் துறைமுக பகுதியில் குப்பை அதிக அளவில் இருப்பதைக் கண்ட அவர், மீன்பிடி துறைமுகத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டுமென மீனவர்களுக்கு அறிவுரை வழங்கினார். ஆய்வுஅப்போது கலெக்டரிடம் கிராம பஞ்சாயத்தார்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்கள்.
ஆய்வின்போது சீர்காழி ஒன்றிய குழு தலைவர் கமல ஜோதி தேவேந்திரன், ஒன்றிய ஆணையர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) இளங்கோவன், உதவி பொறியாளர்கள் தெய்வானை, கலையரசன், கேசவமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார், கிராம நிர்வாக அலுவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் கிராம பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பூம்புகாரில் உள்ள பேரிடர் மேலாண்மை கட்டிடம், கீழையூர் பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சாலை பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.