கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 56 உதவி பேராசிரியர்கள் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியை தொடர்ந்து பல்கலைக்கழகத்தை தமிழக அரசு ஏற்று நடத்த தொடங்கியது.
அதன்பிறகு பல்கலைக்கழகத்தை சீர்படுத்தும் பணிக்காகதமிழக அரசு சார்பில் முதன்மைச் செயலாளர் சிவதாஸ் மீனா நியமிக்கப்பட்டார். அப்போது பேராசிரியர்கள், ஊழியர்களின் கல்வி தகுதிகள் ஆய்வு செய்யப்பட்டன.
அப்போது சிலர் உரிய கல்வி தகுதி இன்றி பணி செய்வது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டது. இதற்கிடையே பல்கலைக்கழக நிர்வாகம் துணைவேந்தர் கட்டுப்பாட்டில் மீண்டும் வந்தது. இதையடுத்து சிவ்தாஸ் மீனாவின் பரிந்துரை கிடப்பில் போடப்பட்டது. அதோடு பல்கலைக்கழகத்தில் தணிக்கை குழு ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின்போது பல்கலைக்கழகத்தில் வெவ்வேறு துறைகளில் பணியாற்றும் 56 பேராசிரியர்கள் அரசு நிர்ணயித்த தகுதி இன்றி விதிமுறைகளை மீறி உதவி பேராசிரியர்களாக பணியாற்றி வந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து தகுதி இல்லாத உதவி பேராசிரியர்கள் 56 பேர் இன்று உயர் கல்வித்துறை உத்தரவின் பேரில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதில் பலரும் 10 மற்றும் 12ம் வகுப்பு முடித்துவிட்டு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று அதனை தகுதியாக காண்பித்து பணியில் சேர்ந்ததும், பிஎச்டி முடிக்காமல் இருந்ததும் தெரியவந்தது. அதன்படி பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் 18 பேர், வெளிக்கல்லூரிகளில் பணியாற்றி வரும் 38 பேர் என மொத்தம் 56 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுபற்றி பல்கலைக்கழகத்தின் பதிவாளர் சிங்காரவேல் கூறுகையில், ‛‛56 உதவி பேராசிரியர்கள் ஆட்சி மன் குழுவின் முடிவின் படியும், உயர் கல்வித்துறையின் அறிவுறுத்தலின்படியும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்” என்றார். இந்த பணி நீக்க நடவடிக்கையில் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.