கடலூரில் தூய்மை பணியாளர்கள் வருகை குறித்து ஆட்சியர் அருண் தம்புராஜ் அதிரடியாக ஆய்வு செய்தார். மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து துப்புரவு பணியாளர்களையும் ஒரே இடத்திற்கு வரவழைத்து ஆய்வு நடத்தினார். கடலூர் நகராட்சியாக இருந்து பெருநகராட்சியாக மாறி தற்போது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 45 வார்டுகள் மட்டுமே கொண்ட இந்த கடலூர் மாநகராட்சியை முதன்மை மாநகராட்சியாக கொண்டு வர வேண்டும் என்று கடலூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே, கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதேபோல் குப்பைகளை வீடு வீடாக சென்று வாங்காததால் பொதுமக்கள் குப்பைகளை வீதியில் வீசி செல்வதாக குற்றம்சாட்டப்பட்டது. கவுன்சிலர்களும் இதுகுறித்து தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர். இந்த நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் இன்று காலை அனைத்து துப்புரவு பணியாளர்களும் கடலூர் மஞ்சள் நகர் மைதானத்திற்கு வர வேண்டும் என உத்தரவிட்டார்.