மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை திருவொற்றியூர் தொகுதிக்குட்பட்ட கார்கில் நகர் பகுதியில் உள்ள பெராகா ஜெப கூட அரங்கில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு அதிமுக பொதுச் செயலாளாரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி நிவாரண உதவிகள் வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்ததாவது..
“மிக் ஜாம் புயல் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி சென்னை மாநகரம் புறநகர் பகுதி, சென்னையை சுற்றிய மாவட்டங்களில் கன மழை பெய்தது. இதனால் பல இடங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இதனால பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் பாதிப்படைந்தனர். மக்களுக்கு தேவையான உணவுகள் தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பெரும்பாலான பகுதிகளில் கிடைக்கவில்லை.
சென்னை மாநகர் முழுவதும் வெள்ள நீரில் தத்தளித்தது. இதனால் பொதுமக்கள் வெளியேற முடியாத சூழல் இருந்தது. திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு சென்னை மாநகரில் கனமழை பொழிந்தாலும் ஒரு சொட்டு நீர் கூட தேங்காது என திமுகவினர் மார் தட்டி கொண்டார்கள்.
இந்த அரசுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை. ஏற்கெனவே வானிலை ஆய்வு மையம் பத்திரிகைகள் மூலம் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என தகவல் அளித்தது. இதனை அரசு பொருட்படுத்தாமல் அலட்சியமாகவும், மெத்தனமாகவும் இருந்ததன் காரணமாக மக்கள் கடுமையான பாதிப்படைந்து உள்ளனர் .
அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியவுடன் அனுபவம் வாய்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் நியமிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று ஆய்வு செய்து எங்கெல்லாம் அடைப்பு உள்ளது என்று ஆய்வு செய்து வேகமாக செயல்பட்டு தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொண்டனர்.
அமைச்சர் கே.என்.நேரு சேலத்தில் நடக்க உள்ள இளைஞர் மாநாடு பற்றித்தான் அதிகம் கவனம் செலுத்தினார். சென்னை மாநகரமே வெள்ளத்தில் தத்தளிக்கிறது. அதிமுக ஆட்சியில் அடையாறு பேசின் உள்ளிட்ட மூன்று பேசின்கள் கொண்டுவரப்பட்டன. 2400 கிலோ மீட்டர் வடிநீர் கால்வாய் அமைக்க திட்டம் தீட்டப்பட்டது. அரசு மீது குற்றம் சொல்வதற்காக சொல்லவில்லை, அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள அமைச்சர் வடிநீர் கால்வாய் 90 சதவீதம் முடிவடைந்து விட்டதாக சொன்னார். ஆனால் நேற்று 45% பணிகள் முடிவடைந்ததாக சொல்கிறார்.
அம்பத்தூர் பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில் 800 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது, அதற்கு தக்க நிவாரணம் அரசு வழங்க வேண்டும். கொரோனா காலத்தில் தொழிற்பேட்டைகள் மூடப்பட்டதால் அதிக நஷ்டம் ஏற்பட்டது. அவை படிப்படியாக முன்னேறி வரக்கூடிய நிலையில் தற்போது இயந்திரங்கள் பழுதாகி உள்ளது. அதேபோல மயிலாடுதுறை நாகப்பட்டினம் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை பெய்தததால் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. தமிழ்நாடு முழுவதும் எங்கெல்லாம் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கே எல்லாம் அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.
ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்காது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்னார். அவர் சொன்னது அனைத்தும் பொய். எதிர்க்கட்சியின் பணி மக்கள் பிரச்னைகளை எடுத்துச் சொல்வது தான். 1240 கிலோ மீட்டர் மழை நீர் வடிகால் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது. திமுக அரசு புதிதாக எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை . ஏற்கனவே உள்ள திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதுதான் அவர்கள் பணி. ஆனால் அதை கூட முறையாக அரசு செய்யவில்லை”
இவ்வாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.