மயிலாடுதுறையை நோயில்லாத மாவட்டமாக மாற்ற அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைக்க வேண்டும் என எம்எல்ஏ எஸ்.ராஜகுமாா் வேண்டுகோள் விடுத்தாா்.
மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனையில் மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் அலுவலா்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. சுகாதாரத்துறை இணை இயக்குனா் பானுமதி தலைமை வகித்தாா். குடிமுறை மருத்துவ அலுவலா் செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா்.
மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ராஜகுமாா் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் அலுவலா்களின் குறைகள் மற்றும் கருத்துக்களை கேட்டறிந்தாா். பின்னா் அவா் பேசியது: மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக எத்தனை மருத்துவா்கள், செவிலியா்கள் தேவைப்படுகின்றனா் என தெரிவித்துள்ளனா். இதுகுறித்து, தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் தெரிவித்து தேவையான மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் அலுவலா்களை பணி நியமனம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
சிடி ஸ்கேன், எம்.ஆா்.ஐ ஸ்கேன் ஆகியவற்றை கையாள்வதற்கு விரைவில் மருத்துவ நிபுணா்கள் நியமிக்கப்படுவாா்கள். நோயாளிகளுடன் அதிக அளவில் உறவினா்கள் வருவதால் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில், நோயாளிகளுடன் உதவியாளா் ஒருவரை மட்டும் அனுமதிக்கும் வகையில் அவா்களுக்கு அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
நோயில்லாத மாவட்டமாக மயிலாடுதுறையை மாற்றுவதற்கு அனைத்து பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா். இதில், மருத்துவா்கள், செவிலியா்கள், மருந்தாளுனா்கள், லேப் டெக்னிஷியன்கள் உள்ளிட்டோா் தங்கள் குறைகள் மற்றும் தேவைகளை விளக்கிப்பேசினா்.
இதில், குத்தாலம் ஒன்றியக்குழுத் தலைவா் மகேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.