0 0
Read Time:4 Minute, 25 Second

மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு எதிராக காவல்துறை நடத்திய புகைக்குண்டு வீச்சில், மேலும் ஒரு விவசாயி உயிரிழந்தார்.

விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி முற்றுகை போராட்டம் நடத்த டெல்லியை நோக்கி டிராக்டரில் விவசாயிகள் பேரணி சென்றனர். பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் டெல்லிக்குள் நுழைய முயன்றதால், சாலைகளில் தடுப்புகளை அமைத்து எல்லையிலேயே அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

ஆனால், தடுப்புகளை அகற்றி மேற்கொண்டு முன்னேறி வர முயற்சித்தனர். அப்போது, அவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை போலீசார் வீசினர். இருப்பினும், சாக்கு பைகளை முகத்தில் கட்டியவாறு, கண்ணீர் புகையின் தாக்கத்தை சமாளித்துக் கொண்டே, விவசாயிகள் தடுப்புகளை கடந்து வர முயற்சித்தனர்.

ஆனால், அடுத்தடுத்து போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். இதனிடையே, கடந்த 18-ந் தேதி, விவசாயிகள் சங்க தலைவர்களுடன் மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் முண்டா, பியூஷ் கோயல், நித்யானந்த் ராய் ஆகியோர் 4-வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பருப்பு வகைகள், மக்காச்சோளம், பருத்தி ஆகியவற்றை 5 ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையில் மத்திய அரசு அமைப்புகள் கொள்முதல் செய்யும் என்று ஒரு திட்டத்தை முன்வைத்தனர். இந்தக் கோரிக்கையை பரிசீலிக்க அவகாசம் கொடுக்கும் விதமாக, போராட்டத்தை நிறுத்திவிட்டு, எல்லையிலேயே விவசாயிகள் தங்கி விட்டனர்.

இந்நிலையில், நேற்று பஞ்சாப்-அரியானா இடையிலான கானாரி எல்லையில் முகாமிட்டிருந்த விவசாயிகள், டெல்லி நோக்கி செல்வதற்காக தடுப்புகளை அகற்ற முயன்றனர். அப்போது, போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் ஏற்பட்ட பயங்கர மோதலில் 3 விவசாயிகள் படுகாயம் அடைந்தனர். அவர்களில் பஞ்சாப்பைச் சேர்ந்த 24 வயதேயான இளம் விவசாயி சுப்கரன் சிங் என்பவர் பாட்டியாலாவில் உள்ள ராஜிந்திரா மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இதற்கிடையே, 5-வது சுற்று பேச்சுவார்த்தைக்கு வருமாறு விவசாயிகள் சங்கங்களுக்கு மத்திய வேளாண் அமைச்சர் அர்ஜுன் முண்டா அழைப்பு விடுத்துள்ளார். இதனால், போராட்டத்தை தற்காலிகமாக 2 நாட்களுக்கு விவசாயிகள் நிறுத்தி வைத்துள்ளனர்.

இந்த நிலையில், மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு எதிராக காவல்துறை நடத்திய புகைக்குண்டு வீச்சில், மேலும் ஒரு விவசாயி உயிரிழந்துள்ளார். இதையடுத்து, பாஜக அரசின் அடக்குமுறைக்கு இதுவரை 4 விவசாயிகள் பலியாகியுள்ளதாக விவசாயிகள் சங்கங்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன. இதனால் டெல்லி எல்லையில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %