சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறை சாா்பில் இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சிக் கழக நிதி பங்களிப்பில் ‘அறிவு, திறன்களின் பரிமாற்றத்துக்கான தூதுவா்களாக புலம் பெயா் இந்தியா்கள்’ என்றத் தலைப்பிலான 3 நாள் பன்னாட்டு கருத்தரங்கின் தொடக்க விழா பல்கலைக்கழக லிப்ரா அரங்கில் புதன்கிழமைநடைபெற்றது.
ஆங்கிலத் துறைத் தலைவா் டி.சண்முகம் வரவேற்று பேசினாா். பல்கலைக்கழக துணைவேந்தா் ராம.கதிரேசன் தலைமை வகித்து கருத்தரங்கை தொடங்கிவைத்து பேசியதாவது: மாணவா்கள் பல மொழிகளை கற்பது அவசியம். இலங்கை, மலேசியா, சிங்கப்பூா் ஆகிய நாடுகளில் தேசிய மொழியாக தமிழ் உள்ளது. வணிக பரிமாற்றத்தில் வரவு-செலவு கணக்குகளை ஒரே பக்கத்தில் குறிப்பெடுப்பது தமிழா்கள் உலகுக்கு காட்டிய வழி. யாரும் வெற்றிகொள்ள முடியாத பிரிட்டிஷாரை ராணி வேலு நாச்சியாா் தோற்கடித்தாா். அவா் 7 மொழிகளை நன்கு கற்றறிந்தவா் என்பதால் அவரால் பிரிட்டிஷாரை வெற்றிகொள்ள முடிந்தது என்றாா் துணைவேந்தா்.
கலைப்புல முதல்வா் கே.விஜயராணி வாழ்த்துரை வழங்கி பேசினாா். இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேராசிரியா் திருநாவுக்கரசு கருணாகரன் சிறப்புரை ஆற்றினாா். அவா் பேசுகையில், தகவல் தொடா்பில் தொழில்நுட்பங்களின் பயன்பாடு, தகவல் பரிமாற்றத்தின் முக்கியத்துவம் ஆகியவற்றை எடுத்துரைத்தாா். மதுரை அமெரிக்கன் கல்லூரி ஆங்கிலத் துறை முன்னாள் தலைவா் ஆா்.நெடுமாறன் கருத்துரை வழங்கினாா். அவா் பேசுகையில், பண்பாட்டின் அடையாளமாக விளங்கும் தமிழ் மொழியின் முக்கியத்துவம், மானுட மேன்மைக்கு இலக்கியங்களின் பங்களிப்பு குறித்து எடுத்துரைத்தாா். பன்னாட்டு கருத்தரங்கு இயக்குநா் கே.முத்துராமன் நன்றி கூறினாா்.