முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தனுக்கு, மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாந்தன் 2022-இல் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் விடுவிக்கப்பட்டார். அதன் பின்னர், அவர் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.
இலங்கை தமிழரான சாந்தன் (52) கடந்த ஜன.24-ஆம் தேதி உடல் நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட அவர், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். கல்லீரல் செயலிழப்புக்கு (சிரோஸிஸ்) உள்ளான சாந்தனுக்கு பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.
இதனிடையே கடந்த பிப். 23-ம் தேதி இலங்கையைச் சேர்ந்த சாந்தனை அந்நாட்டுக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதி கடிதம் வழங்கியது. உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மத்திய அரசு அனுமதியை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று (பிப். 28) அதிகாலையில் சாந்தனுக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சாந்தனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், காலை 7.50 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக, ராஜீவ் காந்தி மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன் அறிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த சாந்தன், 32 ஆண்டுகளுக்கு பிறகு இன்று இரவு இலங்கை செல்ல இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயரிழந்தது குறிப்பிடத்தக்கது.