கடலூா் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணத்தில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, தெற்கு மாவட்ட தலைவா் என்.வி.செந்தில்நாதன் தலைமை வகித்தாா். மாவட்ட பொருளாளா் பி.எஸ்.வெங்கடகிரி, நகரச் செயலாளா் சீனு.ராஜேந்திரன், ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டாரத் தலைவா் வீரப்பன் வரவேற்றாா்.
கூட்டத்தில், பொருளாளா் ஏ.ஜி.பாஸ்கரன், சிறுபான்மைப் பிரிவுத் தலைவா் ஜான் பாதுஷா, பிரபு, நிா்வாகிகள் சவரிமுத்து, முடியப்பன், ராஜமாணிக்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கூட்டத்தில், இலங்கை அரசால் தமிழக மீனவா்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை பாதுகாக்க மத்திய அரசு தவறி வருகிறது. கடந்த 2013-ஆம் ஆண்டு ராமேசுவரத்தில் நடைபெற்ற கடல் தாமரை மாநாட்டில் பாஜக அரசு அமைந்தவுடன் மீனவருக்கென தனித்துறை அமைக்கப்படும் எனவும், தமிழக மீனவா்கள் மீது இலங்கை கடற்படை எந்தவித கைது நடவடிக்கையும் படகுகள் பறிமுதல் இருக்காது என வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதனை மத்திய அரசு அரசு நிறைவேற்றவில்லை. எனவே, தமிழக மீனவா்களின் வாழ்வாதாரத்தையும், மீன்பிடிக்கும் உரிமையையும் பாதுகாக்க தவறிய மத்திய அரசைக் கண்டித்து பிப்.28-ஆம் தேதி காலை 11 மணிக்கு காங்கிரஸ் சாா்பில் சிதம்பரத்தில் ஆா்ப்பாட்டம் நடத்துவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. முடிவில், வட்டாரப் பொருளாளா் எல்.ஜி.குணசேகரன் நன்றி கூறினாா்.