கடலூர் மாவட்டத்தில் கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரி உள்பட 10 அரசு ஆஸ்பத்திரிகள், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி ஆகிய இடங்களிலும், 10-க்கும் மேற்பட்ட தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்களிலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் இந்த சிகிச்சை பிரிவை தனியார் ஆஸ்பத்திரிகளிலும் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிக்சை அளிக்க தனியார் ஆஸ்பத்திரிகள் முன்வர வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. அதன்படி 10-க்கும் மேற்பட்ட தனியார் ஆஸ்பத்திரிகள் முன் வந்தன.
7 தனியார் மருத்துவமனைக்கு அனுமதி
இதையடுத்து அந்த ஆஸ்பத்திரிகளின் விவரங்களை சென்னைக்கு அனுப்பி வைத்து, சுகாதாரத்துறை அனுமதிக்காக வைக்கப்பட்டு இருந்தது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் 7 தனியார் ஆஸ்பத்திரிகள் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதில் கடலூரில் கிருஷ்ணா ஆஸ்பத்திரி, கல்யாண் ஆஸ்பத்திரி, கடலூர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி, லட்சுமி ஆஸ்பத்திரி, கண்ணன் ஆஸ்பத்திரி, விருத்தாசலம் பி.பி.எஸ். மருத்துவ மையம், சிதம்பரம் கண்ணன் நர்சிங் ஹோம் ஆகிய 7 ஆஸ்பத்திரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இது தவிர மேலும் 3 தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகம் சுகாதாரத்துறைக்கு பரிந்துரை செய்துள்ளது. சுகாதாரத்துறை அனுமதி கிடைத்தால், அந்த 3 ஆஸ்பத்திரிகளும் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறலாம்.
முதல்-அமைச்சர் காப்பீட்டு அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் இங்கு இலவசமாக சிகிச்சை பெறவும் வழிவகை செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நிருபர்: அருள்மணி, கடலூர்.