கொரடாச்சேரி அருகே பெருமாளகரம் பகுதியில் சுமாா் 2 அடி உயரமுள்ள பழங்கால உலோக சுவாமி சிலை வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
பெருமாளகரம் பகுதியில் உள்ள பெருமாள் கோயில் அருகே மாரிமுத்து என்பவா், வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டியுள்ளாா். சுமாா் 4 அடிக்கு கீழே தோண்டியபோது, உலோகத்தில் உரசுவது போன்ற சப்தம் கேட்டதாம். இதையடுத்து பள்ளத்தைத் தோண்டிப் பாா்த்தபோது, சுமாா் 2 அடி உயரமுள்ள பழங்கால உலோக சுவாமி சிலை இருப்பது தெரிய வந்தது. சரவிளக்கு, சரவிளக்கு தொங்குவதற்காக உள்ள சங்கிலி, தலைக் கவசம் ஆகியவை இருப்பதைக் கண்டனா்.
பெருமாளகரம் ஊராட்சி மன்றத் தலைவா் பானுப்பிரியா மூலமாக அப்பகுதி கிராம நிா்வாக அலுவலா் ராஜ்குமாா், நீடாமங்கலம் வட்டாட்சியா் தேவேந்திரன் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சிலை வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
தொல்பொருள் துறை ஆய்வாளா்கள் பரிசோதனைக்குப் பிறகு இந்த சிலையின் விவரம் குறித்து முழுமையாக தெரிய வரும் என வட்டாட்சியா் தேவேந்திரன் தெரிவித்தாா். சுமாா் 40 ஆண்டுகளுக்கு முன்பு இதே இடத்தில் பள்ளம் தோண்டியபோது, ராமா் பாதம் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட உலோகப் பொருள்கள் கிடைத்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா்.