சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளைதான் கடைசி நாள். எனவே சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் அதற்குரிய ஆவணங்களுடன் சென்று ஏப்ரல் மாதம் 15-ஆம் தேதி அன்று 18 வயது நிறைவடைந்தவர்கள் சேர்த்துக் கொள்ளலாம்.
வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளுக்கு 10 நாட்கள் முன்பு வரை வாக்காளர்கள் பெயரை சேர்க்கலாம் என சத்யபிரத சாகு கூறியிருந்தார். அதன்படி மார்ச் 17ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள். எனவே அதற்கு 10 நாட்களுக்கு முன்பு என்றால் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க நாளைதான் கடைசி நாள்.
டெல்லியில் தேர்தல் ஆணையர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது தமிழகம், புதுவைக்கு ஒரே கட்டமாக அதுவும் முதல் கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் தமிழகத்தில் முதல் கட்டமாக தேர்தல் தேதி வைக்கப்பட்டதில் அவசர கதியில் நடத்தவில்லை. அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் அதிகாரிகளை கலந்து ஆலோசித்துதான் முடிவு செய்யப்பட்டது. கடந்த முறை 2ஆம் கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. எனவே எப்போதும் இந்த கட்டத்தில்தான் தேர்தல் நடத்தப்படும் என சொல்ல முடியாது. வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க, வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளுக்கு 10 நாட்களுக்கு முன்பு கடைசி நாளாகும் என்றார்.
அதன்படி மார்ச் 27ஆம் தேதி வேட்புமனுவை தாக்கல் செய்ய கடைசி நாள். எனவே அதற்கு 10 நாட்களுக்கு முன்பு என்றால் நாளை மார்ச் 17ஆம் தேதிதான் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடைசி நாளாகும். இப்தார் நோன்பு கூட்டங்களில் அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ள எந்த தடையும் இல்லை. ஆனால் அங்கு வாக்கு சேகரிக்கக் கூடாது.
85 வயதுக்கு மேற்பட்டோர் வீட்டில் இருந்து வாக்களிக்கலாம். இதற்கு விரும்புபவர்கள் மனு அளிக்கலாம். தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார். திருக்கோவிலூருக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று முதலில் தவறாக இடம் பெற்று விட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அவகாசம் உள்ளது. வாக்குப் பதிவுக்கு 7 நாட்களுக்கு முன்பு பூத் சிலிப் கொடுக்கப்படும். முதல்வர் அலுவலகம், அரசு அலுவலங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள தலைவர்களின் படங்கள் அகற்றப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் இருக்கும் சூழல்களை கருத்தில் கொண்டே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநில தேர்தல் ஆணையர்களிடம் ஆலோசனை பெற்றே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இவ்வாறு சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.