பிரதமர் மோடி, தனக்கும் பாஜகவுக்கும், என்டிஏக்கும் தமிழக மக்கள் கொடுக்கும் ஆதரவை பார்த்து திமுகவின் தூக்கமே தொலைந்துவிட்டது என்று கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் பிரசாரங்களை தொடங்கி விட்டனர். தேர்தலையொட்டி நாடு முழுவதும் பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.
அந்த வகையில் இன்று சேலம் மாவட்டம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் பாஜகவின் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று 1 மணியளவில் கலந்துகொண்டார். அதில் அவர் பேசியதாவது:
தமிழகத்தில் பாஜகவும் எனக்கும் கிடைக்கும் வரவேற்பை இந்தியாவே வியந்து பார்த்துக்கொண்டிருக்கிறது. பாஜகவுக்கும் என்டிஏ கூட்டணி கட்சிக்கும் கிடைக்கும் ஆதரவை பார்த்து திமுகவின் தூக்கமே போய்விட்டது. தமிழ்நாடு மக்கள் ஒரு முடிவு செய்துவிட்டார்கள். ஏப்ரல் 19 ஆம் தேதி விழுகின்ற ஓட்டு எல்லாம் பாஜகவுக்கு தான். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தான். தமிழக மக்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டனர். தமிழக மக்களின் ஆதரவால் இந்த முறை பாஜக கூட்டணி 400 ஐ தாண்டும். 400 தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி பெற வேண்டும். கோட்டை மாரியம்மன் மண்ணிற்கு வந்திருப்பது பெருமையளிக்கிறது. ராமதாஸ், அன்புமணியின் அனுபவம் பாஜகவிற்கு உதவியாக இருக்கும் என்றார்.
அப்போது தமிழில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி , “400க்கும் மேல.. என்று கூறினார். பின்னர் தொடர்ந்து பேசிய அவர், நவீன உள் கட்டமைப்பிற்கு நானூறை தாண்ட வேண்டும்… பாரதம் தன்னிறைவு பெற நானூறுக்கும் மேல் பெற வேண்டும்.. விவசாயிகள் பயனடைய நானூறுக்கும் மேல் பெற வேண்டும்… எனவே இம்முறை வேண்டும் 400க்கு மேல…” என்று பேசினார்.