தமிழகத்தில் 9 மக்களவைத் தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க.வின் தேசிய தலைமை.
அதன்படி, பா.ஜ.க. சார்பில் எம்.எல்.ஏ., மாநிலங்களவை எம்.பி., முன்னாள் ஆளுநர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். அதேபோல், வேலூர் மக்களவை தொகுதியில் பா.ஜ.க.வின் தாமரை சின்னத்தில் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார்.
முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தென் சென்னை தொகுதியிலும், தூத்துக்குடியில் எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரனும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணனும், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நீலகிரி (தனி) மக்களவை தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
மத்திய சென்னை தொகுதியில் வினோஜ் பி செல்வமும், கிருஷ்ணகிரி தொகுதியில் நரசிம்மனும், கோவை தொகுதியில் பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலையும் போட்டியிடுகின்றனர்.
இதில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அண்மையில் மாநிலங்களவைக்கு தேர்வுச் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.