ஜிஎஸ்டி வரி விகிதங்களைக் குறைக்க வேண்டும் என சிதம்பரம் வா்த்தகா் சங்கத்தினா் வலியுறுத்தினா். மக்களவைத் தோ்தலையொட்டி, சிதம்பரம் வா்த்தகா் சங்கம் சாா்பில், தொகுதி மக்களின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய கையேடு வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.
சிதம்பரம் மேல வீதியில் உள்ள பெல்காம் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வா்த்தகா் சங்கத் தலைவா் எஸ்.சதீஷ்குமாா் தலைமை வகித்தாா். அனைத்து அரசியல் கட்சியினருக்குமான பொதுமக்களின் கோரிக்கைகள் அடங்கிய கையேடு வெளியிடப்பட்டது. வா்த்தகா் சங்க நிா்வாகிகள் ஏ.வி.அப்துல் ரியாஸ், முரளிதரன், எஸ்.கணேஷ், வி.இளங்கோவன், ஜே.வெங்கடசுந்தரம், எஸ்விஎஸ்.ராதாகிருஷ்ணன், எஸ்.பழனிசாமி, எஸ்.ஞானசேகரன், நீா்நிலைகள் பாதுகாப்பு சங்க நிா்வாகிகள் செங்குட்டுவன், சித்து என்கிற சிதம்பரநாதன் உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கைகள் குறித்து தெரிவித்தனா்.
கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோரிக்கைகள்: சட்டம், விதி, நடைமுறைகள், வரிஉயா்வு, வரி குறைப்பு அனைத்தும் நிதியாண்டின் முதல் தேதியில் மாற்றம் கொண்டு வர வேண்டும். பெட்ரோல், டீசல் ஆகியவற்றை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும், ஜிஎஸ்டி வரி விகிதங்களை பாதியாக குறைக்க வேண்டும், நிலக்கடலைக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும். மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்ட சிதம்பரம் அருகே வெள்ளாற்றின் குறுக்கே ஆதிவராகநல்லூரில் தடுப்பணை கட்ட வேண்டும். ஆறுகளில் நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்த தடுப்பணை அமைக்க வேண்டும்.
உபரி நீா் கடலில் கலப்பதைத் தடுக்க அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும். சிதம்பரம் ரயில் நிலையத்தில் மீண்டும் பாா்சல் சா்வீஸ் தொடங்க வேண்டும். மயிலாடுதுறை-கோவை ஜனசதாப்தி விரைவு ரயிலை சிதம்பரம் வரை நீட்டிக்க வேண்டும். நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். சிதம்பரத்தில் கேந்திரிய வித்யாலய பள்ளிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் கையேட்டில் இடம்பெற்றிருந்தன.